search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரனாய் விஜயன்"

    போலீஸ் காவலில் வாலிபர் மரணமடைந்த வழக்கில் 2 போலீஸ்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததை அடுத்து கேரள முதல்வரை சந்ததித்து வாலிபரின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற வாலிபரை கடந்த 2005-ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓணம் பண்டிகையை யொட்டி ரூ.4 ஆயிரத்துடன் புது துணி எடுக்கச் சென்ற உதயகுமாரை திருடன் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோதுதான் இந்த கொடூரம் நடந்தது.

    தனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக உதயகுமாரின் தாய் பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றிய ஜிதக்குமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிதாஸ், ஷாபு மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை கேட்க கோர்ட்டுக்கு வந்திருந்த பிரபாவதி தீர்ப்பை தொடர்ந்து வானத்தை நோக்கி கைகூப்பி வணங்கி கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.



    இந்த நிலையில் பிரபாவதியும், அவரது இன்னொரு மகன் மோகனன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகத்திற்கு சென்று முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்தார். கூப்பிய கரங்களுடன் கண்ணீர் சிந்தியபடி தன்னை நோக்கி பிரபாவதி வருவதை பார்த்ததும் பினராய் விஜயன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரபாவதியின் கைகளை பிடித்தபடி அவருக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த வழக்கில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுத்ததற்காக அவருக்கு நன்றி கூறினார். தனது மகன் உதயகுமார் கொலையுண்டபோது பினராய் விஜயன் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்ததையும், அப்போது அவர் தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையும் பிரபாவதி அவரிடம் நினைவுபடுத்தினார்.



    மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், இதில் தனக்கு அரசின் உதவி தேவை என்றும் பிரபாவதி கேட்டுக்கொண்டார். சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் மாநில அரசு கண்டிப்பாக செய்யும் என்று பினராய் விஜயன் அவரிடம் உறுதியளித்தார். #PinarayiVijayan
    ×